சென்னையில் உள்ள சீமானின் வீட்டுக்குள் நுழைந்தால் வாத்துகள் மற்றும் கோழி போன்ற பல பறவைகளின் காவலைத்தாண்டிதான் உள்ளே நுழைய முடியும். நான் வாயில் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் திமுதிமுவென ஒரு வாத்து சாலைக்குச் சென்றுவிடுவதற்காக ஓடிவந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கதவை மூடினேன். பறவைகளின் காவலைத் தாண்டினால் இரண்டு நாய்கள் வந்து நம் மேனியெங்கும் முகர்ந்து பரிசோதிக்க... ஏய்.. வீரா.. சூரா.. வழி விடுங்க... அதட்டிக்கொண்டே தோன்றி வரவேற்கிறார் சீமான். புதுமாப்பிள்ளை களை இன்னும் நீங்காத முகம்.
ஈழத்திலிருந்து தொடங்குவோம், இப்போது அங்கே தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து..?
இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக அந்த மக்கள் உறுதியுடன் வாக்களித்திருக்கிறார்கள். பல்வேறு அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் அந்தமக்கள் தங்கள் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிங்களர்களுடன் சேர்ந்து வாழ முடியாது நாங்கள் தனித்த இனம் என்பதை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழர்கள் மீது பல்லாண்டுகாலமாக சிங்களர்கள் வன்மத்தைக் காட்டிக்கொண்டும் தமிழர்களின் இரத்தம் குடித்துக்கொண்டுமிருக்கிறார்கள் என்கிற உண்மையை உலகத்துக்கு உரத்துச் சொல்லும் குரலாகவே நான் பார்க்கிறேன். உலகநாடுகளின் கட்டாயத்தினால் அந்தத் தேர்தல் அங்கே நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஒரு மாமன்றஉறுப்பினருக்கு இருக்கிற அதிகாரம்கூட அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற முதல்வருக்கு இருக்குமா?என்பது கேள்விக்குறி. ஆனாலும் இந்தத் தேர்தல் வெளிப்படுத்துகிற இன்னொரு உண்மை என்னவென்றால், தமிழ்மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்துவிட்டோம், அவர்களுடைய புனர்வாழ்வு திருப்திகரமாக இருக்கிறது என்று தொடர்ந்து ராஜபக்சே சொல்லிக் கொண்டிருப்பது அப்பட்டமான பொய் என்பது நிருபணமாகியிருக்கிறது. அப்படிச் செய்திருந்தால் தமிழ்மக்கள் ராஜபக்சேவுக்கு வாக்களித்திருக்கவேண்டுமே. எனவே இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒற்றை யாட்சிக்குள் இலங்கையில் வாழ்கிறீர்களா? அல்லது தனித்தமிழ் ஈழமாக மீள்கிறீர்களா? என்கிற கருத்தை முன்வைத்து ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்தத் தேர்தல் வெற்றி மூலம் எந்த நன்மையும் தமிழ்மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை யென்றாலும் அரசியல்போராட்டத்தில் இது வலுவான முதல்தளம் என்று பார்க்கிறோம்.
விரைவில் நடக்கவிருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது தொடர்பாக விக்னேஸ்வரன் தெரிவிக்கிற கருத்துகள் நீங்கள் உட்பட தமிழக தலைவர்கள் தெரிவிக்கிற கருத்துக்கு மாறாக இருக்கிறது அல்லவா?
அவர் ஏற்கெனவே தெரிவித்த சில கருத்துகளுக்காக நான்கூட அவர் மீது கடிந்து ஓர் அறிக்கை கொடுத்தேன். ஈழவிடுதலை என்பது உலகெங்கும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற தேசிய இனங்களின் விடுதலைக்கான குறியீடு. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சிக்கான அடையாளம் அது. நாம் இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிந்திருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல நெருக்கடிகளுக்கு இடையிலும் ஈழவிடுதலைக்காகத் தமிழக மக்கள் முன்னிற்கக் காரணம் அது தங்கள் விடுதலை என்று நினைப்பதுதான். இப்படி உலகநாடுகளில் பரவியிருக்கும் தமிழர்கள் நினைப்பதும் தமிழகத்தின் அழுத்தமான குரல்களும்தாம் அங்கே தேர்தல்நடக்க முக்கிய உந்து சக்தியாக இருந்ததென்பதை யாரும் மறுக்கமுடியாது. அங்கே இருக்கிற களச்சூழலை வைத்து அவர் பேசுகிறார். இங்கே இருக்கிற சூழலை வைத்து நாம் பேசுகிறோம். ஆனால் இருவரும் ஒரே உணர்வால் பிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, இங்குள்ள இனவிடுதலையை அவாவி நிற்கும் தலைவர்களோடு கலந்துபேசி முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயல்படுவது நல்லது என்று நான் நினைக்கிறேன். இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டாலே அது சிங்களஅரசு செய்த இனப்படுகொலையை அங்கீகரித்ததுபோல ஆகிவிடும் என்று நாம் பார்க்கிறோம்.
தமிழகத்தின் குரலைப் புறக்கணித்து இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இந்தியா செயல்படுவது போலவே தெரிகிறதே..
தமிழகத்தை ஆளுகிற தலைவர்களுக்கு தமிழகத்தை ஆளவேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே தவிர உலக அளவில் பிற மொழி வழித்தேசிய இனங்களைப் போல தமிழர்கள் தன்மானத்துடன் வாழவேண்டும் என்கிற எண்ணம் இல்லை. இவர்களுக்கு தமிழினத்துக்கான நிலைப்பாடு என்று எதுவுமில்லை. தமிழ்மக்கள் விடாது போராடினால் அது குறித்துச் சிந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் மட்டும்தான் இருக்கிறது. ஏனெனில் இவர்கள் இது தங்களுடைய இனத்தின் சிக்கல் என்று பார்ப்பதில்லை. கலைஞரோ ஜெயலலிதாவோ தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி இருபது இலட்சம் பேரைத் திரட்டிப் போராடமுடியுமே? அவர்கள் அதைச் செய்வதில்லை. இது இந்தியாவுக்கு வசதியாகப் போய்விட்டது. அதனால் நாம் போகவில்லையென்றால் சீனா வந்துவிடும் என்கிற பொருந்தாத கதைகளைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். எனவே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்றியாக வேண்டும். பாகிஸ்தானும் சீனாவும் சிங்களமும் இந்தியாவுக்கு எதிராக இருக்கின்றன. ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நட்புநாடாக இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லி இந்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான அழுத்தத்தை தமிழகம்தான் கொடுத்தாக வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் ஈழத்தமிழ்மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று நீங்கள் பேசினீர்கள். இப்போது என்னவாயிற்று?
நான் எப்போதும் என்னை மட்டுமே நம்பி நிற்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும் அதிமுகவும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய செல்வாக்குள்ள கட்சிகளாக இருந்து வருகின்றன. அவற்றிற்கடுத்து வேறு யாரும் வரவில்லை. அப்படி ஒரு சக்தி வருவதை இவ்விரு கட்சிகளுமே விரும்பாமல் அதைக் குலைக்க முயன்று வெற்றியும் பெற்றுவந்திருக்கின்றன. இந்நிலையில் நாங்கள் செய்ய நினைப்பது இவற்றிற்கான ஒரு சரியான மாற்று அரசியல் சக்தியாக, தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடக்கூடிய சக்தியாக நாம்தமிழர் கட்சியை முன்னிறுத்துவதுதான். இது வரலாற்றுப்பெரும்பணி. இது நீண்டகாலப் பயணம்.
இந்தப்பயணத்தில் பிற தமிழ்த்தேசியஅமைப்புகளுடன் இணைந்து பயணிக்கிற திட்டம் இருக்கிறதா? அதற்கான வாய்ப்புகள் எப்படியிருக்கின்றன?
பொதுவாக தமிழ்த்தேசிய அமைப்புகள் தேர்தல்பாதையை முற்றாகப் புறக்கணிக்கின்றன. தேர்தலைப் புறக்கணிக்கிற கட்சிகளை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறையில் உள்ள எதார்த்தம். தேர்தலில் பங்குபெறுவதில்லை என்று சொல்கிற அமைப்புகளோடு இணைந்து செயல்படும் வாய்ப்பு இல்லை.
தேர்தலில் பங்குபெறுகிற முற்போக்கு சக்திகளோடு ஒருங்கிணைந்து செயல்படுகிற திட்டம் இருக்கிறதா?
அதிலொன்றும் சிக்கல் இல்லை. அதில் எங்களின் நிலை என்னவென்றால்,யாரும் ஒன்றாக நிற்கலாம், நாங்கள்தாம் முன்னால் நிற்போம் என்பதுதான். எத்தனை தளபதிகளும் இருக்கலாம் மன்னர் நாங்கள்தாம். எம் நிலத்தில் முதல்வராக தமிழர்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தந்தைபெரியார், ‘சேவை செய்கிற உரிமைதான் எனக்கு இருக்கிறது. இந்த மண்ணை ஆளுகிற உரிமை பச்சைத்தமிழர் காமராசுக்குத்தான் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். அந்த எண்ணத்தைத்தான் எதிரொலிக்கிறோம். தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லும்போது ஆளுகிற உரிமையை மட்டும் அயலவருக்கு எப்படிக் கொடுக்கமுடியும்?
வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் நாம்தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன?
இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. போட்டியிடுகிறவர்களில் யார் நம் இனத்துக்கான உரிமைகளை முன்னெடுக்கிற வகையில் அறிக்கைகள் கொடுக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வோம். அணிகள் தெளிவாக அமைந்த பிறகு யாரை ஆதரிப்பது? யாரை எதிர்ப்பது? என்பதை முடிவு செய்வோம்.
கடந்த தேர்தலில் நீங்கள் அதிமுகவை ஆதரித்துப் பேசினீர்கள். இப்போது அவர்களே நீங்கள் பேசுவதற்குத் தொடர்ந்து தடைவிதிக்கிறார்கள். என்ன காரணம்?
கடந்த ஆறுமாதங்களாகவே என்னுடைய கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. குறிப்பாக தஞ்சையில் மீத்தேன் எரிவாயு சம்பந்தப்பட்ட அறப்போராட்டம், தந்தைபெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டம் ஆகியவற்றையும் தடை செய்தார்கள். இவற்றிற்கான காரணங்கள் என்னவென்று புரியவில்லை. ஒருவேளை அதிகாரிகள் இதற்குக் காரணமாக இருக்கிறார்களோ? என்னவோ? தெரியவில்லை.
சட்டம் ஒழுங்கு என்று காரணம் சொல்லப்படுகிறது. என்னை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிட என்று சொல்வதுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதா? என்னை சுதந்திரமாக நடமாடவிட்டுப் பாதுகாப்புக் கொடுப்பதுதானே சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதற்கு அர்த்தம். இவற்றை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். போன அரசு செய்ததையே இந்தஅரசும் செய்கிறது.
இந்த அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வைப்பதில்லை என்று சொல்லப்படுகிறதே?
விமர்சனம் வைப்பதால்தான்தானே என்னைப் பேச விடமறுக்கிறார்கள்? இப்போது உங்களிடம் வைப்பது இந்த அரசின் மீதான விமர்சனம்தானே. பேச விட்டால்தானே மேடைகளில் விமர்சனம் செய்யமுடியும்?
அடோபர், 2013